முரசு அஞ்சல் பற்றி

விண்டோசு, மெக் கணினிகளில் உள்ளடக்கங்களைத் தமிழில் உருவாக்கவும் திருத்தவும் பதிப்பிக்கவும் தேவையான மென்பொருள் கருவிகளின் தொகுப்பே முரசு அஞ்சல்.

எங்கள் பயணம்

எம்.எஸ்.டாஸ் 3.1இல் இயங்கிய தனிநபர் கணினியில், 1985 ஆம் ஆண்டு முத்து நெடுமாறன் பொழுதுபோக்காகத் தொடங்கிய முயற்சியிலிருந்தே இந்த மென்பொருள் உருவானது. சீரான புதுமைகளாலும் தொடர்ச்சியான புதுப்பிப்புகளாலும், கணினித் தமிழின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப முரசு அஞ்சல் வளர்ந்து வந்துள்ளது. முதல் விண்டோசு பதிப்பான முரசு அஞ்சல் 5.0, விண்டோசு 3.0 க்காக 1991 இல் வெளியானது. இரண்டு உள்ளிடுமுறைகளுடனும் இணைமதி எழுத்துருவுடனும் கூடிய மெக் பதிப்பை, 2004 இல் மெக் ஓ.எஸ். 10.4 உடன் ஆப்பிள் தன் இயக்க முறைமையிலேயே முரசு அஞ்சல் கூறுகளைச் சேர்த்துக்கொண்டது.

தமிழ்ப் பதிப்புத் துறையின் மறுமலர்ச்சி

தொடங்கிய நாள் முதலே, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தமிழ்ப் பதிப்புத் துறையை முரசு அஞ்சல் முற்றாக மாற்றியமைத்தது. இரு நாடுகளிலும் வெளிவந்த நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், அச்சு நூல்கள் அனைத்திற்கும் இம்மென்பொருளே அடித்தளமாக அமைந்தது. அதன் தாக்கத்தையும் நம்பகத்தன்மையையும் கருத்தில் கொண்டு, மலேசிய கல்வி அமைச்சு 2002-2003 ஆம் ஆண்டுகளில் நாட்டிலுள்ள 523 தமிழ்ப் பள்ளிகள் அனைத்திற்கும் உரிய அலுவல்முறை மென்பொருளாக முரசு அஞ்சல் செயலியை தகுதரமாக நிறுவியது. சிங்கப்பூர் கல்வி அமைச்சு 2008 இல் இதே நடைமுறையைத் தொடங்கியது; 2009 இல் அங்குள்ள பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் முரசு அஞ்சல் நிறுவப்பட்டது. இன்றளவும் அதுவே அவர்களின் அலுவல்முறைத் தமிழ்ச் செயலியாக இருந்து வருகிறது.

உலகளாவிய பயன்பாடு

இன்று, உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பயனர்கள் தங்கள் கணினித் தமிழ்த் தேவைகளுக்கு முரசு அஞ்சல் செயலியையே நம்பியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் தமிழ் வழி தொடர்பாடலுக்கும் பதிப்புக்கும் இது இன்றியமையாத கருவியாக விளங்குகிறது.

முரசு அஞ்சல் 12

கோலாலம்பூர், சிங்கப்பூர், சென்னை ஆகிய ஊர்களில் நடத்திய வெளியீட்டு நிகழ்ச்சிகளின் வழி, முரசு அஞ்சல் 12ஐ அறிமுகப்படுத்தியதில் பெருமை கொள்கிறோம். பயனர் எழுதும் முறையைக் கற்றுக்கொள்ளும் அறிவார்ந்த முன்கணிப்பு உள்ளீடு, கற்றுக்கொண்ட சொற்களை நிருவகிக்கும் சொற்பட்டியல் தொகுப்புச் செயலி, உள்ளமைந்த அகரமுதலிகள், உரை வாசிப்புச் செயலியான சொல்வன் முதலியவை இதில் அடங்கும். இவற்றோடு எல்லா எழுத்துருக்களையும் மேம்படுத்தி பல புதியனவற்றையும் அறிமுகம் செய்துள்ளோம்.

எங்கள் நோக்கம்

நாற்பது ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்குக் கணினித் தமிழை எளிதாகவும் திறன் மிக்கதாகவும் ஆக்குவதிலேயே எங்கள் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். புதுமைகளைத் தொடர்ந்து உருவாக்கி - எல்லைகளை விரிவுபடுத்தும் அதே வேளையில், தமிழ் மொழியின் எண்ணிமவியல் எதிர்காலத்தை செழித்தோங்கச் செய்யவும் உறுதி பூண்டுள்ளோம்.

anjal.net இணையதளத்தின் பழைய பதாகை
அஞ்சல் தளத்தின் முந்தைய பதாகை, 2006–2025. அஞ்சல் 12 இல் புதுப்பிக்கப்படுவதற்கு முந்தைய எழுத்துரு வடிவம்.